அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் அதிரடி கைது

அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் அதிரடி கைது

அமெரிக்காவில், இந்திய மாணவர்கள் 129 பேர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், போலியான கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான விசா பெற்று,  அமெரிக்காவில் தங்கியிருப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, உதவி தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது, இந்தியத் தூதரகம்.

அமெரிக்காவில், உயர்கல்விக்கு  இந்திய மாணவர்கள் அதிக அளவில் செல்கின்றனர். இவர்களைப் பல கல்வி நிறுவனங்கள் போட்டிபோட்டுத் தேர்வுசெய்கின்றனர். இதில், சில கல்வி நிறுவனங்கள் ஆசை வார்த்தை கூறி, தங்களது கல்வி நிறுவனத்தில் சேர்த்து பணம்பார்த்துவருவதாகவும், இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு படிப்பு சொல்லித்தராமல், வேலை வாய்ப்பை வழங்குவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், போலி கல்வி நிறுவனங்களின் அனுமதிக் கடிதத்தைக் காண்பித்து விசா பெற்று அமெரிக்காவில் தங்கியுள்ளவர்களை அதிரடியாகக் கைதுசெய்து சிறையில் அடைத்து வருகிறது, அமெரிக்க உள்துறை பாதுகாப்புப் பிரிவு. முதல்கட்ட அதிரடி நடவடிக்கையில் 129 இந்திய மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள்குறித்த விவரங்களை அறியவும், இந்திய மாணவர்களின் குடும்பத்தினருக்கு உதவவும், இந்தியத் தூதரகம், உதவி தொலைபேசி எண்ணையும் (202-322-1190 மற்றும் 202-340-2590)  இ-மெயில் முகவரியையும் (cons3.washington@mea.gov.in) அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், “அமெரிக்க வெளியுறவுத் துறையில் இந்திய மாணவர்கள்குறித்த விவரங்களைக் கேட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு அனைத்து விதமான  உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

டெட்ராய்டின் பெர்மிங்டன் ஹில்ஸ் பல்கலைக்கழகம் என்ற போலி பல்கலைக்கழகத்தில் பிஸினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அறிவியல் படிப்புகள் சொல்லிக்கொடுப்பதாக விளம்பரம் செய்துவந்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். முதல் கட்டமாக, குடியேற்றச் சட்டத்தின் அடிப்படையில் 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கக் குடியேற்றத்துறை அதிகாரி, “போலியான கல்வி நிறுவனங்களின்மூலம் அமெரிக்காவில் நுழைபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. தற்போது, முதல் கட்ட நடவடிக்கையில்தான் இறங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில், அதிக அளவில் நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.

மாணவர்கள், அறியாமையால் போலியான கல்வி நிறுவனம்குறித்த விவரங்கள் தெரியாமல், அமெரிக்காவில் நுழைந்துவிடுகின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விசா வழங்கி, பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இனியாவது, கல்வி நிறுவனம்குறித்த முழு விவரங்களை அறிந்தபின்பு அமெரிக்கா வருவது நல்லது. போலி கல்வி நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட எட்டு பேரின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இனியாவது, இந்திய மாணவர்கள் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this