கடல் முதல் வானம் வரை ஊழல்

கடல் முதல் வானம் வரை ஊழல்

கடல் முதல் வானம் வரை பாதுகாப்பு ஒப்பந்தங்களில் காங்கிரஸ் ஊழல் புரிந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:
திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த கட்டடம், திருப்பூர், சென்னையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், சென்னை துறைமுகம்- மணலி இடையே குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் செலுத்தாமல் இடைத்தரகர்களை வைத்து கடலில் இருந்து வானம் வரையில் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் காங்கிரஸ் ஊழல் புரிந்தது. பாதுகாப்புத் துறை ஊழல் புரியவும், நண்பர்களுக்கு உதவுவதற்காகவுமே இருந்தது.
இன்று ஊழலுக்காகக் கைது செய்யப்படும் இடைத்தரகர்கள் யாரோ ஒரு தலைவருடன் தொடர்புடையவர்கள்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்பதே எனது அரசின் கனவு. இதற்கான தேவைகளுக்காக தமிழகம் உள்பட இரு இடங்களில் பாதுகாப்புத் தொழில்வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற 40 ஆண்டு கால ராணுவ வீரர்களின் கோரிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு
தான் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட துல்லியத் தாக்குதலையும் காங்கிரஸ் தலைவர்கள் கொச்சைப்படுத்தி பேசி உள்ளனர்.
ராணுவம் புரட்சி செய்ய முயன்றதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் சொல்லி உள்ளார். இந்திய ராணுவம் ஒருபோதும் இதுபோன்ற செயலில் ஈடுபடாது. உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் குறுகிய காலத்தில் 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 18 ஆயிரம் கிராமங்களுக்கு நின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி செய்து தரப்படும்.
இந்த பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தைப் பற்றி கவலைப்படாத கட்சி காங்கிரஸ். மிகப் பெரிய அறிவாளி என்று நினைக்கும் மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் நடுத்தர வர்க்கத்தினர் விலைவாசி உயர்வைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று கிண்டல் செய்தார். அதனால்தான் அவர்கள் காங்கிரûஸ தோற்கடித்தனர். மத்திய அரசின் நல்ல பணிகள் சிலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவேதான், அவர்கள் என்னை வசைபாடுகின்றனர்.

நீங்கள் தில்லியில் அமர்த்திய ஆட்சி ஊழலுக்கும், தவறான செயல்களுக்கும் பூட்டுப்போட்டுள்ளது. இந்த மாதிரியான ஆட்சிதான் வேண்டும் என்று காமராஜர் விரும்பினார்.
இடைத்தரகர்கள் அதிகார வர்க்கத்தைச் சுற்றி வந்தது நீக்கப்பட்டுள்ளது. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைத்தவர்கள் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, ஐஸ் கிரீம், மொபைல் ரீசார்ஜுக்கு குடும்பத்துக்கான “பேக்கேஜ்’ இருந்தது. ஆனால், தற்போது நீதிமன்றத்துக்குச் சென்று ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கு ஜாமீன் கோரும் “பேக்கேஜ்’ உள்ளது.இவர்கள் தங்களை யாரும், என்றும் கேள்வி கேட்க முடியாது என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது இவர்கள் கொள்ளை அடித்த பணத்துக்கு கணக்குக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றமாகும்.
மோடி எதுவும் செய்யவில்லை என்றால் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) ஏன் எங்களைத் தோற்கடிக்க மெகா கூட்டணிகளைத் தேடிச் செல்கிறீர்கள்? உங்களின் செயல் திட்டம் என்ன, கொள்கைகள் என்ன?
வாரிசு அரசியலை முன்னெடுப்பது, நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவையே எதிர்க்கட்சிகளின் திட்டம். விவசாயிகளையும், இளைஞர்களையும் தவறாகத் திசைதிருப்பும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அளிப்பதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.7.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டிருக்கும்.
எதிர்க்கட்சிகளைப் போல, தேர்தல் பிரசாரத்துக்காக விவசாயக் கடன் தள்ளுபடி என அறிவிக்காமல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்துப் பேசுகிறோம்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது நமது குறிக்கோள்.
இதனால்தான், பொதுப் பிரிவில் இருக்கும் ஏழை மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக யாருடைய இட ஒதுக்கீடும் பாதிக்கப்படாது.
காங்கிரஸ் – திமுக ஆட்சியில்தான் பதவி உயர்வில் பட்டியல் சமுதாயம், மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கினார்கள். ஆனால், வாஜ்பாய் அரசுதான் எஸ்.சி., எஸ்.டி. மக்களைப் பாதுகாக்க மிகவும் உறுதியான சட்டங்களைக் கொண்டுவந்தது என்றார்.

 

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this