கிரிமினல் குற்றம் குறித்து வேட்பாளர்கள் நாளேடு, டிவியில் விளம்பரம் செய்வது கட்டாயம்

கிரிமினல் குற்றம் குறித்து வேட்பாளர்கள் நாளேடு, டிவியில் விளம்பரம் செய்வது கட்டாயம்

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் தங்கள் மீதுள்ள கிரிமினல் குற்றங்கள், நிலுவையில் இருக்கும் குற்றங்கள், விசாரணையில் இருப்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விளம்பரம் செய்வது இந்த தேர்தலில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின், தங்களின் குற்றப்பின்னணி குறித்து நாளேடுகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கப்படும் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவியாக இருக்கும் என்று உத்தரவிட்டிருந்தது. இதை அடிப்படையாக வைத்துத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவு மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக அமலுக்கு வருகிறது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை தொலைக்காட்சி, நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறையாவது வெவ்வேறு தேதிகளில் மக்கள் அறியும் படி விளம்பரம் செய்வது கட்டாயமாகும்.

ஆனால், கிரிமினல் குற்றங்கள் குறித்து விளம்பரம் செய்யும் வேட்பாளர்கள் அதற்குரிய செலவை அவரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சியோ ஏற்க வேண்டும், அது தேர்தல் செலவுக் கணக்கில் வரும்.

ஒருவேளை கிரிமினல் குற்றவிவரங்களை நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்யாத வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்.

மேலும், தங்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் அளிக்கப்பட்டதற்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.

அதேசமயம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது எந்தவிதமான கிரிமினல் வழக்குகளும் இல்லாவிட்டால் அவர்கள் நாளேடுகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தேவையில்லை என்று இன்று விளக்கம் அளித்துள்ளது.

 

இதே தகவலை திருத்தப்பட்ட வேட்பாளர் படிவம்26-ல் வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும். தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும், எவ்வளவு கிரிமினல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். இதை அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளங்களில் பதிவிட வேண்டும்.

மேலும், அவ்வாறு கிரிமினல் விவரங்களைத் தாக்கல் செய்யாமல் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு எதிராக மற்றொரு வேட்பாளரோ அல்லது வாக்காளரோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். அதுமட்டுமல்லாமல் எதிர்தரப்பு வேட்பாளர் குறித்து தவறான தவல்களை நாளேடுகளில் பிரசுரித்தாலும் அதைச் செய்த வேட்பாளருக்கு அபராதமும், கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this