தமிழக மக்களுக்கு நல்ல செய்தி

தமிழக மக்களுக்கு நல்ல செய்தி

வெயிலில் வாடி வதங்கி என்று மட்டும் சொன்னால் போதாது, வெயிலில் மண்டை காய்ந்து போன தமிழக மக்களுக்கு என்று சொன்னால் கொஞ்சம் சரியாக இருக்கும்.

பிப்ரவரி மாதக் கடைசியிலேயே சூரியன் ஜம்மென்று நம்மை சுட்டெரிக்க வந்துவிட்டார். அது முதல் பெரிதாக எந்த நாளும் லீவ் எடுத்துக் கொள்ளாமல் தினந்தோறும் அவரது பணியை செவ்வனே செய்து, தமிழக மக்களை ஆப்ரிக்கர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அது நடந்தேறியும் விடும் போலத்தான் தெரிகிறது.

சரி கோடை வெயில் அதன் வேலையைச் செய்கிறது. அதைக் குத்தம் சொல்லி என்னப் பயன். மரங்களை வெட்டி வனத்தை அழித்து, நீர் நிலைகளை மூடி அதன் மீது வீடு கட்டி விட்டு, இப்போது குத்துதே, குடையுதே என்று கலங்கினால் யார் வந்து காப்பாற்றுவார்கள்.

இதற்கு விமோசனமே கிடையாதா? ஜூலை மாதம் வரை இப்படி வத்தலாக வெயிலில் காய்ந்துதான் ஆக வேண்டுமா என்று வறண்டுபோன தொண்டையோடு கேட்கும் தமிழர்களின் குரல் கேட்கிறது.

இதற்கு பதில் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.

தமிழக மக்கள் வெகு நாட்களாகக் காத்திருந்த அந்த நல்ல செய்தி வந்துவிட்டது. ஏப்ரல் 18ம் தேதி அல்லது அதற்கு ஒருநாள் முன்பு அல்லது ஒரு நாள் பின்பு தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடற்கரையை தள்ளியிருக்கும் உள் மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கும். அதே சமயம் கடற்கரையை ஒட்டியிருக்கும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போதிருக்கும் அதே வெப்பநிலையே நீடிக்கும். அதாவது 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் நீடிக்கும். (சென்னைவாசிகள் மனம் தளர வேண்டாம்)

அதே சமயம், உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த 10 நாட்கள் என்றால் 10 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யாது. அடுத்த 10 நாட்களில் ஏதேனும் ஒரு சில நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும்.

குறிப்பாக நீலகிரி, திருநெல்வேலியின் மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் பகுதிகள், தேனி போன்ற மாவட்டங்களில் ஒரு சில நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன மழை எல்லாம் கிடையாது. ஒரு அரை மணி நேரம் அல்லது கால் மணி நேரம் தான் மழை பெய்யும்.

இதற்குக் காரணம் என்ஜிஓ தான். நமது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு என்ஜிஓ வந்திருப்பதே மழைக்குக் காரணமாக அமையும். அதில்லாமல் மேற்கில் இருந்து வரும் காற்றும், கிழக்கில் இருந்து வரும் காற்றும் மோதுவதால் உள் மாவட்டங்களில் இந்த மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ்நாடு வெதர்மேன்

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this