தமிழ்நாட்டில் டாப் 15 முக்கிய மலை வாசஸ்தலங்கள்!

தமிழ்நாட்டில் டாப் 15 முக்கிய மலை வாசஸ்தலங்கள்!

ஊட்டி:
ஊட்டி தமிழகத்தில் பிறந்த யாருக்கும் ஊட்டியை பற்றி தெறியாமல் இருக்க முடியாது. நீலகிரி மலையில் உள்ள ஒரு அழகிய ஊர் தான் ஊட்டி. இதன் சிறப்பு பெயர் மலைகளின் ராணி என்றால் அது மிகை ஆகாது. இங்கு வருடம் முழுவதும் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவதே இல்லை. ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள ‘புளூ மவுண்டைன்’ எனப்படும் நீலகிரி மலைதான் ஊட்டிக்கு தனி அழகை சேர்க்கிறது .

ஊட்டியின் தட்ப வெட்ப நிலை விவசாய வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது, இன்று பெருமளவு காபி, தேயிலை தோட்டங்கள் இங்குள்ளன. இதுவே இன்று இவ்வூர் மக்களின் முதன்மை தொழிலாக உள்ளது. ஊட்டியின் வளர்ச்சி ஆங்கில ஆட்சியிலிருந்துத் தொடங்கியது எனலாம். ஊட்டிக்கு மலைப்பிரதேசங்களின் ராணிஎன பெயர் சூட்டினார்கள்.

ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட குளிர் சற்று அதிகமே இருக்கும் . ஊட்டியை சுற்றியுள்ள முக்கிய இடங்கள் தொட்டபெட்டா மலைச் சிகரம் , பொடானிக்கல் கார்டன் ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி அகியவை, உலகம் முழுவதும் இருந்து லட்ச கணக்கான சுற்றுலா பயணிகளை இங்கு இழுக்கிறது எனலாம்.

ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சுற்றுலா தலமாகும். இதனை சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். இதன் அருகே உள்ள விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.

ஊட்டி ஏரி, ஊட்டி படகு இல்லம் , பொடானிக்கல் கார்டன் , ஊட்டி மலை ரயில், தொட்டபெட்டா சிகரம், டால்பின் மூக்கு , கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, எமரால்ட் ஏரி (Emerald Lake) , புலிமலை, கோத்தகிரி, பிளாக் தண்டர், துரூக் கோட்டை, லெம்ப் பாறை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, பைக்காரா அருவி, ஸ்டீபன் தேவாலயம், பொம்மை ரயிலும், முகுருத்தி தேசியப்பூங்காவில் வன உயிரினங்களை உலவுவதையும் , ஏரியில் படகுபயணம் செய்தும் மகிழலாம், பைன் காடுகளும், அழகிய அருவிகளும் நம் மனதை கொள்ளை கொள்ளும்.

ஏற்காடு:
தமிழ்நாட்டின் சேர்வராய மலைப்பகுதியில்அமைந்துள்ள மற்றொரு பிரசித்தி பெற்ற பகுதி ஏற்காடு ஆகும். இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். சுற்றுப்புறபகுதிகள் வறண்டு கிடக்கும் நிலையில், ஏற்காடு அதன் பசுமையான, இதமான வானிலையுடன்ரம்மியமான உணர்வை அளிக்கிறது. மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆரஞ்சு, காபி, பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி,வாழை,ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை இங்குஅபரிமிதமாக வளர்க்கப்படுகின்றன.


இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம். பல்வேறு அருவிகள்,பார்வை புள்ளிகள் முதல் பல்வேறு நீர்வீழ்ச்சிகள்வரை உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது.

மிகக் குறைந்த செலவில் பயணம் மேற்கொண்டு நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம் என்பது சுற்றுலா பயணிகளின் எண்ணம்.

ஏலகிரி:

தமிழ்நாட்டில் உள்ள மலை வாசஸ்தலங்களில் ஒரு பிரபலமான இடம்
ஏலகிரி ஆகும். ஏலகிரி மலையில் ஆண்டு முழுவதும் மிதமான குளிர்ச்சியுடன் கூடிய தட்ப வெப்பநிலை நிலவுகிறது. ஏலகிரிக்கு வந்து சேர்ந்தவுடன் முதலில் ஒருவர் கவனத்தைக் கவருவது இதன் அமைதியான சூழலும் கிராமீய மணம் கமழும் அழகும் தான். பூந்தோட்டங்கள் , புல்வெளிகள் மற்றும் பழத்தோட்டங்களால் சூழப் பட்டிருப்பதால் இவ்விடம் பழங்கள் மற்றும் இலைதழைகளின் வாசம் சூழ்ந்து காணப்படுகிறது. அழகிய இயற்கை வளம் சூழ்ந்த பாதைகளின் வழியே பயணம் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

 


புங்கனூர் ஏரி ஏலகிரியின் குறிப்பிடத்தக்க இடங்களுள் ஒன்று. இங்கு படகு சவாரி செய்வது மலைகளால் சூழப்பட்ட இந்த இடத்தின் இயற்கை அழகை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மலையின் மீதிருந்து விரிந்து கிடக்கும் பசுமை நிறைந்த சமவெளிகள் காணக் கிடைக்கின்றன.

பல்வேறு பழங்குடியின மக்கள் வாழும் ஏலகிரி, தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கோடைக்கானல் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. இருப்பினும், சமீபகாலமாக ஏலகிரி மாவட்ட நிர்வாகம் பாராக்ளைடிங், மலையேறுதல் முதலிய விளையாட்டு வகைகளை பிரபலப்படுத்துவதன் மூலம் ஏலகிரியை ஒரு சாகச சுற்றுலா மையமாக பிரபலப்படுத்த முயற்சி செய்து வருகிறது. சாலையில், ஏலகிரிஅடைவதற்கு 14 கொண்டை ஊசி வளைவை
ஏறவேண்டியிருக்கும்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் என்ற அழகிய மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை “மலைகளின் இளவரசி” என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தற்போது நாம் காணும் இந்த கொடைக்கானல் நகரம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப் பட்டது. பிரையண்ட் பூங்கா, தேவாலயங்கள், நடைபாதைச் சாலை, ஏரி இவையெல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டவை.
குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் மக்களை மிகவும் கவருகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. ஏரி, நீர்வீழ்ச்சி புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும், மிதிவண்டியில் செல்வதும். குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களைக் கவர்கிறது.

 


அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம். கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், 500 ஆண்டு பழமையான மரம், பேரிஜம் ஏரி என, சுற்றுலா பயணிகளுக்காக பெரிய லிஸ்டே இருக்கிறது.
ப்ளம்ஸ் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களுக்கும் கொடைக்கானல் புகழ் பெற்றது. சாக்லேட் விரும்பிகளின் சொர்க்கம் கொடைக்கானல்.

குன்னூர்
பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உள்ள சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல் உங்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. தனிப்பட்ட மணத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்ற நீலகிரி தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது. பயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக காணப்படும் இவ்விடம் எப்போதும் ஆள் நடமாட்டத்துடன் காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. தொட்டபெட்டா சிகரம், டால்பின் மூக்கு , கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, எமரால்ட் ஏரி, புலிமலை, பிளாக் தண்டர், துரூக் கோட்டை, லெம்ப் பாறை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, ஸ்டீபன் தேவாலயம், முகுருத்தி தேசியப்பூங்காவில் வன உயிரினங்களை உலவுவதையும், மகிழலாம், பைன் காடுகளும், அழகிய அருவிகளும் நம் மனதை கொள்ளை கொள்ளும்.

 

கோத்தகிரி
கோத்தகிரி மலைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையேறும் (ட்ரெக்கிங்) அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். கோத்தகிரி – புனித கேத்தரின் அருவி பாதை, கோத்தகிரி – கொடநாடு பாதை, கோத்தகிரி – லாங்க்வுட் ஷோலா பாதை ஆகியன. நீலகிரியின் மலைகள் புல்வெளிகள் இடையே புகுந்து சென்று மலையேறுவோரின் மனதையும் ஆன்மாவையும் வருடிச்செல்லும் பல சிறிய தடங்களும் இங்கு உள்ளன. ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட் , கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும். மணம் வீசும் யூகாலிப்டஸ் மரங்கள் கூடுதல் அழகு. கோடை ஓய்வுவை முடித்துக் கொண்டு மணம் கமழும் டீ தூள் மற்றும் யூகாலிப்டஸ் தைலமும் வாங்கிவரலாம்.

 

வெள்ளியங்கிரி மலை
தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது.

Image result for velliangiri hills

கொல்லி மலை
அரிய மூலிகைகள் இருக்கின்றன என்கிற ரீதியில் தான் கேள்வியுற்றிருப்போம். அதைத்தாண்டி கொல்லி மலை ஒரு நல்ல சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. மரங்கள் சூழ்ந்த மலை சாலையில் மரங்களின் நிழல்களுக்கு இடையே 72 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே தனி சுகம்.
1300 படிக்கட்டுகள் கீழ்நோக்கி அரை மணி நேரம் மலை இறங்கினால் அழகிய ஆகாய கங்கை அருவி. குளித்து மகிழ்ந்து மீண்டும் மலை ஏற ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஒரு பயணமே திரில்லான அனுபவத்துக்கு உத்தரவாதம். மாசில்லா அருவி என்று மற்றொரு சிறிய அருவியும் குளிக்க உகந்தது. பழங்களின் மலையான இங்கு ருசியான பலா, கொய்யா பழங்கள் கிடைக்கும்.

Image result for kolli hills
கொல்லி மலையில் இருக்கும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் அரப்பளீஸ்வரர் கோயிலாகும். இக்கோயில் தமிழ் வள்ளல்களில் ஒருவராக போற்றப்படும் வல்வில் ஓரி என்ற மன்னனால் கட்டப்பட்டதாகும்

ஆனைமலை
பொள்ளாச்சியில் இருந்து 14கி. மீ., தூரத்தில் உள்ள ஆனைமலைப்பகுதி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா இடமாக விளங்குகிறது
காடுகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் ஆனைமலை. சில நாட்கள் தங்கி காடுகளின் அழகை ரசிப்பதோடு மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்கலாம். ஏனெனில் ஆனைமலை கடவுளே நமக்காக அருளிய அழகின் மலை.

Image result for pollachi top slip

டாப்ஸ்லிப் என்றும்அழைக்கப்படும் பகுதியில் யானைபயிற்சி முகாம் உள்ளது. இதில் ஏராளமான மருத்துவகுணம் நிறைந்த மூலிகைச்செடிகளும் உள்ளன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த சரணாலயம் யுனெஸ்காவின் பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேகமலை
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.
தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர். மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களைக் காண கண் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என என பல இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும் ஊர் மேகமலை.

Image result for megamalai
பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு பக்கமும் கரை கொண்ட வாய்க்கால் போல மலைகள் உயர்ந்து நிற்க… இரு மலையின் முகடுகள் வரை மேவி நிற்கின்றன தேயிலைச் செடிகள்.இந்த மலைச் சாலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. மேகமலை வெறும் மலை வாசஸ்தலம் மட்டுமல்ல. இங்கு டிரக்கிங், அனிமல் சைட்டிங் போன்ற மற்ற அம்சங்களும் ஏராளம். விலங்குகளைப் பார்ப்பதற்கு வட்டப்பாறை, போதப்புல்மேடு, சன்னாசி மொட்டை என்கிற ‘எலிபேண்ட் காரிடர்’ ஆகியவைகள் சிறந்த இடம். போதப் புல்மேட்டில் வரையாடுகள் அதிகம்.
மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மஹாராஜா மெட்டு, இரவங்கலாறு என தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்கும், எஸ்டேட் டிவிஷன்களுக்குமான பெயர்களைத் தாங்கி இருக்கிறது இந்த மலைப் பகுதி.அமைதியான சூழலில் அதிகம் செலவில்லாமல் குடும்பத்தோடு கோடை விடுமுறையை கொண்டாட நினைப்பவர்களுக்கு மேகமலை சரியான சாய்ஸ்.

ஜவ்வாது மலை
ஜவ்வாதுமலைத்தொடர் கிழக்கு மேற்காக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், அருவிகள் என காண்போரை மெய்மறக்க வைத்துவருகிறது. இம்மலையின் மேல் பீமன் அருவியும், மலையின் வடபகுதியில் அமிர்தி அருவியும், மேற்குப் பகுதியில் ஏலகிரி மலையில் சலகாம்பாறை அருவியும் சிறு சுற்றுலா இடங்களாக விளங்கிவருகின்றன.

Image result for jawadhu hills
இம்மலையிலிருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டலநதி, மிருகண்டாநதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகத்தோப்பு அணையும் மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் கட்டப்பட்டு அவற்றையும் சுற்றுலா இடமாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. ஜவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி என்ற படகு குழாமும், உள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள பீமன்மடவு அருவியும் காவலூர் வானியல் ஆய்வகமும் முதன்மை சுற்றுலா இடங்களாகும்.

சிறுமலை
ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கு கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். இம்மலையின் உச்சியில்தான் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. 30-45 நிமிடங்கள் நடந்துசென்று இவ்வுச்சியை அடையலாம்.

Image result for siru malai

இங்கு இயற்கையோடு கூடிய மக்கள் விரும்பும் பல முக்கிய இடங்கள் உள்ளன. அன்னை வேளாங்கன்னி தேவாலயம், சிறுமலை நீர்த்தேக்கம், உயர் கோபுரம்,
சஞ்சிவனி மலை, சாதியாறு, வெள்ளிமலை முருகன் கோவில், கான்டிஜ் எஸ்டேட்,செல்வி கோவில், .அகஸ்தியர்புரம், வெள்ளிமலை

குற்றாலம்
தவழும் தென்றலுடன் மழையின் சாரல் காலையில் குளிக்கச் சொல்கிறது, மாலையில் பயமுறுத்தி தள்ளி நிற்கவைத்து தனது ரசிகர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமையான காடுகளும், கண்ணுக்கு விருந்தளிக்கும் கானக பறவையினங்களும், அச்சத்தை உருவாக்கும் காட்டு விலங்குகளும் மட்டும் அல்லாமல் பல்லாயிரக்கணக்கான அரிய வகை மூலிகைகளும் நிரம்பிய இடம் குற்றாலம்.
இது தென்னகத்தின் “ஸ்பா” (ஆரோக்கிய நீருற்று) என்றழைக்கப்படுகிறது.
Image result for kutralamமேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

 

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் “குற்றால சீசன்” என அழைக்கப்படுகிறது.
குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.
1. பேரருவி – இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.
2. சிற்றருவி – இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.
3. செண்பகாதேவி அருவி – பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. தேனருவி – செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள்அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும். தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. ஐந்தருவி – குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன.
6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) – இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத்துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர் பொழுது போக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும், மரக் கன்றுகளும் விற்கப்படுகின்றன.
7. புலியருவி – குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.
8. பழைய குற்றாலம் அருவி – குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.
9. பாலருவி – இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
10. கண்ணுப்புளி மெட்டு – இது செங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர் தேக்கத்தின் மேலமைந்துள்ளது.

வால்பாறை

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மேற்குச் சரிவில் தமிழக பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது வால்பாறை. தென் இந்தியாவின் மிக உயரமான ஆனைமலையின் அடிவாரத்தில் வால் போன்று ஒட்டிக் கொண்டிருப்பதால் வால்பாறை என்று பெயர் கிடைத்திருக்கிறது. சுற்றிலும் தேயிலை, காப்பி தோட்டங்கள், வானுயர மரங்கள், சோலைகள், அருவிகள், நீரோடைகள், தடுப்பணைகள் என்று இயற்கை பல வடிவங்களில் இங்கே தன்னை அலங்கரித்து நிற்கிறது. தேடிச் சென்று காண்பதற்குத்தான் நேரம் வேண்டும். இதன் ஒரு பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகமும், மறு புறம் கேரள எல்லையில் இரவிபுரம் தேசிய பூங்காவும் அமைந்துள்ளது. ஆனால், கோடையில் இவை சற்றே வறண்ட பூங்காகளாகத்தான் இருக்கும்.

Image result for valparai
ஆற்றில் குளித்து மகிழ அழகிய கூழாங்கல் ஆறு இருக்கிறது. அது போல் நல்லமுடி, டைகர் வாலி பள்ளத்தாக்குகள் கண்ணுக்கு விருந்து. 10 கி.மீ. தூரத்தில் லோயர் நீராறு அணையும், 15 கி.மீ. தொலைவில் சின்ன கல்லாறு அணையும் உள்ளது. குரங்கு முடி பகுதியிலிருந்து சோலையாறு அணையை பார்த்து ரசிக்கலாம்.

ஒகேனக்கல்
காவிரி ஆற்றின் பாதையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம் இந்த ஒகேனக்கல். கன்னட மொழியில் ஹொகே என்பது புகையையும், கல் என்பது பாறையையும் குறிக்கும். மலைப்பாறைகள் வழி விழுந்து சிதறும் அருவி நீர் புகை மண்டலமாக இப்பகுதி முழுவதும் வியாபித்திருப்பதால் ‘ஹொகேனக்கல்’ என்று அழைக்கப்பட்டு அதுவே ஒகேனக்கல் என்று திரிந்து நிலைத்துவிட்டது. கர்நாடகம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பிரசித்தமான நீர்வீழ்ச்சி அச்சுறுத்தும் இயற்கையின் மூர்க்கம் எங்கு பார்த்தாலும் மிரளவைக்கும் மலைப்பாறைகள், அவற்றின்மீது ஆக்ரோஷமாக விழுந்து சிதறும் நீரின் அசுரத்தனம், பெருகி ஓடும் பிரவாகத்தின் ஓட்டத்தில் தெறிக்கும் நீரின் சக்தி இவை யாவுமே ஒகேனக்கல்லுக்கு விஜயம் செய்யும் பயணிகளை திகைக்க வைத்து விடுகின்றன. அருவிப்பகுதிக்கு அருகில் இடி இடிப்பது போன்று நீர்வீழ்ச்சி உருவாக்கும் ஒலியை வார்த்தைகளில் விவரிப்பது மிகக்கடினம்.

Image result for hogenakkal
அப்போதே பிடிக்கப்பட்டு எண்ணையில் பொரித்துக்கொடுக்கப்படும் சுவையான மீன்கள், உற்சாகத்தை தரும் எண்ணெய்க்குளியல் போன்ற சுவாரசியமான அம்சங்கள் ஒகேனக்கல் அருவிப்பகுதியில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. சாகச விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் அருவிப்பகுதியில் நீச்சலில் ஈடுபடலாம். ஆனால் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. இது தவிர அருவி அமைந்திருக்கும் மேலகிரி மலையில் நீண்ட மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்றவற்றிலும் சாகச விரும்பிகள் ஈடுபடலாம்.
ஹொகனெக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்வது மற்றொரு திகில் கலந்த உற்சாக அனுபவமாகும். வட்டக்கூடை போன்ற இந்த பரிசல்களில் அமர்ந்தபடி சுற்றிலும் வானுயர்ந்து நிற்கும் மலைகள் மத்தியில் நீர்த்தேக்கத்தை சுற்றி வருவது மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று. ஒகேனக்கல் பகுதியில் உள்ளூர் சிறுவர்கள் கரடு முரடான மலைமுகடுகளிலிருந்து நீர் சுழித்துக்கொண்டு ஓடும் ஆழமான ஆற்றில் குதித்து காண்பிப்பது சுற்றுலாப்பயணிகளை திகைக்க வைக்கும் மற்றொரு ஒரு அம்சமாகும்

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this